செய்தி எண் (ID #) 7337 | | |
திங்கள், அக்டோபர் 3, 2011 |
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது? “மெகா” அறிக்கை! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 11752 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (79) <> கருத்து பதிவு செய்ய |
|
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.
30.09.2011 அன்று பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட மனுக்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை திரும்பப் பெற இன்று இறுதி நாளாகும்.
காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில், நகர்மன்றத் தலைவரையும், உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பது குறித்து “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - மெகா” சார்பில் நேற்று உள்ளூர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில், மெகா செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்...
அன்பிற்கினிய காயல் சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்!
கட்சி சின்னங்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளை ஆதரிப்பது இல்லையென்றும், வார்டு உறுப்பினர்கள் அந்த வார்டுக்கு உட்பட்ட ஜமாஅத்களால் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட வேண்டுமென்றும்,
நகர்மன்றத் தலைமை பொறுப்பை, நகர மக்கள் ஜனநாயக ரீதியாக சிந்தித்து, தங்களுக்கு ஏற்ற தலைமையை தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முக்கிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - மெகா (MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA).
காயல்பட்டினம் நகர்மன்றத்தைப் பொருத்த வரை, இதுவரை புறநகர் வார்டுகளில் ஒரு சிலரைத் தவிர வேறெங்கும், எந்த அரசியல் கட்சிகளும், இந்தத் தேர்தலில் போட்டியிடாததை MEGA மகிழ்வோடு வரவேற்கிறது.
வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஜமாஅத்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கான MEGAவின் முயற்சி, பூரணமாக வெற்றியடையவில்லை என்றாலும், ஆங்காங்கே ஜமாஅத்களால் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை, MEGA வாழ்த்தி மகிழ்கிறது.
நகர்மன்றத் தலைமையைப் பொருத்த வரை, MEGA ஏற்கனவே அறிவித்த நிலைப்பாட்டை அல்லாஹ்வை முன்னிறுத்தி நகர மக்களிடம் மீண்டும் உறுதி செய்கிறது.
அதனடிப்படையில், களத்தில் இருப்பவர்களில் வெற்றிபெறும் அளவிற்கு தகுதியுள்ள போட்டியாளர்களாக சகோதரி மைமூனத்துள் மிஸ்ரியா மற்றும் சகோதரி ஆபிதா ஷேக் ஆகியோர் இருப்பதாக MEGA கருதுகிறது.
ஆகவே, இவர்கள் இருவரின் மார்க்கப்பற்று, கல்வித்தகுதி, நிர்வாகத்திறன், பொதுவாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம், சமூக நலப் பணிகளில் முன் அனுபவம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற பல்வேறு காரணிகளை, மக்களே அலசி ஆராய்ந்து, ஜனநாயக ரீதியில் முழு சுதந்திர உணர்வுடன் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுக்க, நகர மக்கள் அனைவரையும் MEGA அன்போடு வேண்டுகிறது.
இவ்வாறு ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |