தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இதுவரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மட்டும் 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்:-
கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, அருணாச்சலபுரத்தைச் சார்ந்த முனியசாமி என்பவரின் மகன் எம்.செந்தமிழ்ச் செல்வன் (வயது 54) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சதுக்கைத் தெரு கதவிலக்கம் 85 முதல் 291 வரையுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 02ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த முத்து முஹம்மத் என்பவரின் மனைவி முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (வயது 44) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நெய்னார் தெரு கதவிலக்கம் 1 முதல் 136 வரையும், கீழ நெய்னார் தெரு கதவிலக்கம் 1 முதல் 29 வரையிலுமுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 03ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, கோமான் கீழத்தெருவைச் சார்ந்த அப்துல்லாஹ் ஸாஹிப் என்பவரின் மனைவி சாரா உம்மாள் (வயது 31) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சதுக்கைத் தெரு கதவிலக்கம் 1 முதல் 84 வரையிலும், குத்துக்கல் தெரு கதவிலக்கம் 218 முதல் 281 வரையிலும், குறுக்கத் தெரு கதவிலக்கம் 1 முதல் 106 வரையிலுமுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 04ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, சதுக்கைத் தெருவைச் சார்ந்த காழி அலாவுத்தீன் என்பவரின் மனைவி எம்.எஸ்.மொகுதூம் நிஸா (வயது 47) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதே பொறுப்பிற்கு, குறுக்கத் தெருவைச் சார்ந்த கே.வி.மொகுதூம் முஹம்மத் என்பவரின் மனைவி கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கே.எம்.கே. தெரு, ஆறாம்பள்ளித் தெரு, மகுதூம் தெரு, முஹ்யித்தீன் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 05ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சார்ந்த ஹிட்லர் மஹ்மூத் ஹாஜி என்பவரின் பேரனும், மஹ்மூத் என்பவரின் மகனுமான எம்.ஜஹாங்கீர் என்ற எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர் (வயது 35) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சித்தன் தெரு, ஆஸாத் தெரு, அம்பல மரைக்காயர் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த அரபி முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் எம்.எம்.அய்யூப் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த ஈஸா லெப்பை என்பவரின் மகன் எம்.இ.எல்.புகாரீ (வயது 48) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தீவுத்தெரு, கீழநெய்னார் தெரு (எண்கள் 30-460), கற்புடையார் பள்ளி வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, சொளுக்கார் தெருவைச் சார்ந்த முஹம்மத் ஜிஃப்ரீ என்பவரின் மகன் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, பரிமார் தெருவைச் சார்ந்த ஃபக்கீர் முஹ்யித்தீன் என்பவரின் மகன் அப்துல் காதிர் (வயது 27) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காய் பண்டகசாலை, மாட்டுக்குளம், கடற்கரை பூங்கா வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 08ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, மங்களவாடியைச் சார்ந்த பி.முத்து என்பவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 68) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்பாபள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 09ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு, மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த ஃபைரோஸ் என்பவரின் மனைவி எஸ்.எம்.அஹ்மதா பானு (வயது 27) வேட்பு மனு தாக்கல் செய்தார். |