காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவராக, 11ஆம் வார்ட் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது திமுகவின் வெற்றி என்று அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அண்மையில் நகரெங்கும் பிரசுரங்களாக வினியோகிக்கப்பட்டதுடன், நகர திமுக இளைஞர் அணி சார்பில் சுவரொட்டியும் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆர்.எஸ்.கோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் வாசகங்கள் பின்வருமாறு:-
இது தேவைதானா? வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!
நகர்மன்றத் தலைவி சகோதரி ஆபிதாவின் வெற்றி
-ஆண்டவனின் அருளால்,
நகர்மன்றத் துணைத்தலைவர் சகோதரர் மும்பை மெய்தீன் வெற்றி
-ஆண்டவரின் அருளால்?!...
காயல் மாநகரின் நன்மைக்காக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காயல் மாநகரின் அரசியல் கட்சிகள் பாகுபாடு இன்றி கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சையாக 18 வார்டுகளும், நகராட்சித் தலைவருக்கும் போட்டியிட வேண்டும் என்ற ஐக்கியப் பேரவையின் வேண்டுகோளுக்கிணங்க திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஐக்கியப் பேரவையில் கையெழுத்துப் போட்ட மூவரில் நானும் ஒருவன்.
காயல் மாநகரில் காவல் நிலையம், சினிமா திரையரங்குகள், மதுக்கடைகள் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புகளில் 18 வார்டுகளிலும் அரசியல் வாடையே இல்லாமல் 18 சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவி உட்பட அனைவரும் வெற்றி பெற்றது, இது நமது நகருக்குக் கிடைத்த தனிச்சிறப்பு என என்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் பல ஆயிரம் பேர் பெருமிதம் அடைந்தோம். நமது நகரைப் பற்றி மிகவும் பெருமையாக தமிழகம் முழுவதும் பறைசாற்றி வருகின்றோம்.
நகராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் நடந்த உண்மை என்ன? மர்மம் என்ன?
மும்பை மெய்தீன் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டாரா? இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த 13 நகர்மன்ற உறுப்பினர்கள் இவர் திமுகவின் வேட்பாளர் என்று அறிந்து, தெரிந்து, புரிந்துதான் வாக்களித்தார்களா உண்மை என்ன?
மும்பை மெய்தீன் திமுகவின் வேட்பாளராக வெற்றி பெற்றது உண்மை என்றால் வெடிக்கபட்ட பட்டாசுகள், ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) விளம்பரங்கள் அனைத்திற்கும் நியாயம் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஒருவர் நகரின் துணைத்தலைவர் ஆகிறார் என்பதை நினைத்துப் பெருமை கொள்வதில் நான் முதல் ஆளாக இருப்பேன்.
மும்பை மெய்தீனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேரும் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்ற பெற்றவர்களா?
எத்தனை பேர் திமுகவின் விசுவாசிகள்? மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர்? ஜமாஅத்தின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்? நடுநிலையாளர்கள் எத்தனை பேர்?
மும்பை மெய்தீனுக்கு வாக்களித்த 13 நகர்மன்ற உறுப்பினர்களும் நம்மைப் போல் சுயேட்சையாக வெற்றி பெற்ற மும்பை மெய்தீன் மிகவும் திறமைசாலி, நிர்வாகத்திறன் உள்ளவர், இவர் நகரின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் பாடுபடுபவர் என்று நினைத்து நீங்கள் இவரை வெற்றிபெறச் செய்து இருந்தால் உங்களைக் கண்டு என்னைப் போன்ற பல நல்ல உள்ளங்கள் பெருமையடைகிறோம், தலை வணங்குகிறோம்.
மும்பை மெய்தீன் திமுகவின் வேட்பாளர் என்று தெரிந்துதான் 13 நகர்மன்ற உறுப்பினர்களும் வாக்களித்தார்கள் என்றால் இது எந்த விதத்தில் சாத்தியமாகும்?
உங்களின் வெற்றிக்காக பாடுபட்ட மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும், வாக்களித்த நடுநிலை வாக்காளர்களுக்கும், ஜமாஅத்தார்களுக்கும் தாங்கள் சொல்லும் பதில் என்ன? 16வது வார்டு உறுப்பினர் தைக்கா சாமு அவர்கள், 7வது வார்டு உறுப்பினர் சிங்கித்துறை சார்ந்த அந்தோணி இவர்கள் அண்ணா திமுகவின் விசுவாசிகள்.
18வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி எந்த கட்சியையும் சாராதவர். இவர்கள் எல்லாம் எப்படி திமுகவின் வேட்பாளருக்கு வாக்களித்தார்கள்? உண்மை என்ன?
வெற்றி பெற்ற 18 நகர்மன்ற உறுப்பினர்களும் ஆண்டவன் மீது ஆணையாக லஞ்ச லாவண்யத்திற்குத் துணை போகாமல் மக்களுக்கு சேவையாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். இதில் எத்தனை பேர் இறைவனுக்கு பயந்தவர்கள்?
நகர இளைஞரணி அமைப்பாளராக இருந்தும் எனக்குத் தெரியாமலேயே நகர இளைஞரணியின் சார்பாக மும்பை மெய்தீனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்தது யார்? கழகத்தின் கொள்கை கட்டுப்பாடுகளை மீறியது யார்?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காற்றில் பறக்க விட்டுவிட்டு புறமுதுகு காட்டுபவன் திமுக காரனல்ல.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருவரின் கையில் அடமானம் வைப்பதை என்னைப் போன்ற பல ஆயிரம் பேர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கழகத்தின் வளர்ச்சியே எங்களது இலட்சியம். பொதுமக்களுக்கு ஆற்றுகின்ற எங்களின் பணி, சேவை தொடரும்.
ஆர்.எஸ்.கோபால் (சமூக சேவகர்)
நகர இளைஞரணி அமைப்பாளர் - நகர திராவிட முன்னேற்றக் கழகம்
நகர செயலாளர் - மக்கள் செல்வன் ரஜினிகாந்த் மன்ற தலைமை செயலகம்
பதிவு எண்: 4119/89 காயல்பட்டினம்.
மாவட்டத் தலைவர்: திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட தென்றல் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம்
பதிவு எண்: 382/TKD
இவ்வாறு ஆர்.எஸ்.கோபால் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வறிக்கை, நேற்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர், நகரின் இரு ஜும்ஆ பள்ளிகளிலும் பிரசுரமாக பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. |